பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பால பணிகள் 2024 பிப்.,ல் நிறைவடைந்து, பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார்.
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 2022 டிச.23 ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பழைய பாலம் அருகே ரூ.535 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி காணொலி மூலம் துவங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து புதிய பாலம் கட்டுமான பணி 2019 ஆக.11ல் பூமி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் ஆய்வு செய்தார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே புதிதாக அமைய உள்ள ரயில் பாதையை ஆய்வு செய்து, ரயில்வே அதிகாரிகளிடம் பணிகள் தொடங்குவது குறித்து ஆலோசித்தார்.
இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு, விநாயகர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் பாம்பன் ரயில் புதிய பால பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரூப் நாராயண் சுங்கர் கூறியதாவது: பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து வலுவான புதிய ரயில் தூக்கு பாலம், தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை துரிதப்படுத்தி 2024 பிப்.,க்குள் பணிகள் நிறைவடைந்ததும் புதிய பாலத்தில் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தின் ரயில் நிலையத்தின் துணை நிலையமாக செயல்பட்டு வரும் மண்டபம் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என ஆய்வில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில், ரயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மண்டபம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்.
மேலும், ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் சேவைக்கு தேவையான நில கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய ரயில்வே வாரியத்துடன் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளித்து ரயில்வே துறைக்கு தேவையான அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து வருவதால் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“