பாம்பன் பாலத்தில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்படும் என ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே ரெட்டி கூறியுள்ளார்.
ராமநாதபுரத்திலுள்ள மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ தூரத்துக்கு கடலின் மேல் பாலம் 1914-ல் அமைக்கப்பட்டது.
100 ஆண்டுகள் கடந்து விட்ட இந்தப் பாலம், டிசம்பர் மாதம் சேதமடைந்தது. அதன் பிறகு இந்தப் பாலத்தில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பின்னர் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், பயணிகள் இல்லாத ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பயணிகல் சேவைகள் தொடங்கப்படாததால், பொது மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தவிர, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று, ரயில் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே ரெட்டி, பாம்பன் வந்தார். அப்போது பேசிய அவர், “ரயில் தூக்குப் பாலம் 30 கி.மீ தொலைவில், 3 மீ உயரத்தில், 200 கோடி ரூபாய் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் மார்ச்சில், விடப்பட்டு அடுத்த 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். பின்னர் பழைய பாலம் அகற்றப்படும்” எனத் தெரிவித்தார்.