போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 40 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது உதவியாளர் சண்முகம், அசோக்குமார் உள்ளிட்டோர் கூறியதை நம்பி, செந்தில், அம்பேத்கர் உள்ளிட்டோரிடம் 40 லட்ச ரூபாய் வசூலித்து கொடுத்ததாகவும்,
ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்காமல் மோசடி செய்ததாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வரும் அருள் மணி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2014-15ம் ஆண்டுகளில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தனது புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அருள்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.