தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படும் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது. வரும் 2023-ல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விஜயபாஸ்கர் உள்பட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது. வரும் 2023-ல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளதால் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலை எழுந்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:
தமிழகத்தில் ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொலிஎருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறு தழுவுதல் அழைக்கப்பெறுகிறது.
இவ்விளையாட்டு, முல்லை நில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், காளை மாடுகளை 2011 ஜூலை 11-ம் தேதி, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். அதாவது சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்த பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர். இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் காளைகளுக்கும் அமலானது.
அதாவது இந்த விலங்குகளை பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதோ, காட்சிப்படுத்தவோ கூடாது என்ற உத்தரவும் அமலானது. இதை அடிப்படையாக வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்ட போதும், தடை நீங்காமல் போனதற்கு காரணம் இது தான்.
2011ம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட உடன் சிக்கல்கள் துவங்கி விட்டன. அப்போதே விலங்கு ஆர்வலர்கள், பிராணிகள் நல வாரியம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி துவங்க ஆரம்பித்தது. ஆனால், அப்போதெல்லாம் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, அதைக்காரணம் காட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வனத்துறை பாதுகாப்பு சட்டத் தின்கீழ் வன விலங்குகளை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் வகைப்படுத்தி 6 பிரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற வன விலங்குகளை வேட்டையாடவோ, வேட்டையாட முயற்சித்தாலோ தண்டனைக்குரியதாக பார்க்கப்படு கிறது. அதுபோல், மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மனிதர்களால் வதைபடுத்தப்படும் மற்றும் அதற்கான வாய்ப்புள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டு, அவை காட்சிப்படுத்தப்பட்ட, காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின் கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தை பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொந்தளித்தனர்.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு முதலே மாநிலம் முழுவதும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அந்த போட்டிகள் விமரிசையாக கடந்த ஆண்டு நடைபெற்றது. அதேபோல், நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் திரவெறும்பூர், மதுரை, புதுக்கோட்டை, கோவை, காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் அதி விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தே ஆக வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட தமிழர் விரோத அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் கடந்த 2016-ல் மேல் முறையீடு செய்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இம்மனுக்கள் மீது கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டினார். இவ்வழக்குகள் மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 23 முதல் விசாரணை துவங்கி மீண்டும் ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சத்தை எட்டியிருக்கின்றது.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க முடியாது என கூறி தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, விலங்குகளின் காட்சி பட்டியலில் இருந்து வீட்டு வளர்ப்பான மாட்டை தற்பொழுது வரை நீக்காத காரணத்தை வைத்து மேல் முறையீடு பீட்டா அமைப்பு செய்திருக்கிறது. இதனால் காட்சி பட்டியலில் இருந்து வீட்டு வளர்ப்பான மாட்டை நீக்க வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்காக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் ஒரு குழுவினர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அவர்களை திருச்சியில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மாலை மரியாதையுடன் வழியனுப்பினர்.
அதேபோல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான ஒரு குழுவினரும் டெல்லிக்கு விமானம் மூலம் பறந்ததோடு மத்திய அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏதும் சர்ச்சைகள் எழுந்துவிடக்கூடாது. மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கையையும் இன்று விடுத்துள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.