சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் வருவதை முன்னிட்டு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதையொட்டி, தற்போது புதிய ரயில் நிலையம் மற்றும் அதனருகே ஆகாய நடைபாதை அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூபாய் 314 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தை புறநகர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என இரண்டாக கட்டி வருகின்றனர். ஆம்னி பஸ்களுக்கு என தனி பேருந்து நிலையமும் உள்ளே கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி மாதம் இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து 60 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றி இயக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவெடுத்துள்ளனர்.
வெளியூர் செல்வதற்கான அடுத்த முக்கிய பேருந்து நிலையத்தை கிளம்பாக்கத்தில் உருவாக்குவதால், சென்னை மக்கள் போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், அவர்களின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் அதனுடன் ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவுள்ளது.
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக சென்றடைய முடியும். மின்சார ரயில் வசதி கிளாம்பாக்கத்தில் இல்லை என்பதால், பண்டிகை காலங்களில் அனைவரும் சாலை வழியாக பயணிக்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்ப அதிகமாக இருக்கிறது.
எனவே, கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைப்பதற்காக அனுமதி அளிக்க தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சாலை வழியாக நடந்து செல்வதை தவிர்க்கவே, ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும்படி சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு ஒரு ஆகாய நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil