பள்ளி மாணவர்களுக்கு மழை காலங்களில் விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மழைக்கால விடுமுறை:
பள்ளி பருவத்தை கடந்து வந்த அனைவருக்கும் தெரியும் விடுமுறை என்றால் எவ்வளவு ஆனந்தம் என்பது, அதிலும் மழைக்கால விடுமுறை என்றால் அதைவிட குஷி வேறு ஏதுமில்லை. இரவு தொடங்கிய மழை காலை வரை பெய்தாலே போதும் உடனே டிவியை ஆன் செய்து விட்டு ஹாலில் அமர்ந்து விடுவோம்.
விடுமுறை என்று அறிவிப்பார்களா? என பள்ளி செல்லும் 8.30 மணி வரை கண்ணை விரித்துக் கொண்டு நியூஸ் சேன்லகளை பார்ப்போம். அப்படி விடுமுறை என்றால் உடனே அதகளம் தான். அப்படி கடைசி வரை லீவ் என்று சொல்லவில்லை என்றால் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டே பள்ளி செல்வோம்.
டெஸ்ட், ரெக்கார்ட், ஹோம்வோர்க் இவை எல்லாவற்றில் இருந்து தப்பிக்க மழை விடுமுறைய மாணவர்கள் எதிர்பார்ப்பார்கள். 90கிட்ஸ்களின் குருநாதர், முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் மாணவர்களிடம் அதிகம் ஃபேமஸ் ஆனதே அவர் மழை குறித்து எச்சரிக்கை விட்டதும் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்படும் என்பதாலேயே.
ஆனால் இனிமேல் இவை எதையுமே மாணவர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆமாம் இன்றைய தினம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மழைக்கால பள்ளி விடுமுறைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், ”மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் . மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.
மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் விடுமுறை விடப்பாட்டால் அதை ஈடு செய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிற்பித்துள்ளார்.