/indian-express-tamil/media/member_avatars/2025/03/15/2025-03-15t100634324z-sundar.jpg )
/indian-express-tamil/media/media_files/2025/06/07/5Uwf0MOhax8QdMf0LfPy.jpg)
15 வருடத்திற்குப் பின் புதிய தார் சாலை: மதுரை மக்கள் மகிழ்ச்சி!
மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் வி.கே.பி. நகர், பசும்பொன் நகர்ப் பகுதியில் 2,340 மீட்டர் அளவிற்குப் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தத்தில் இருந்து மாடக்குளம் செல்லும் வழியில் உள்ள வி.கே.பி.நகர்ப்பகுதியில் வி.கே.பி. நகர் 1, 2,3,4 என பிரிவுகளாக சாலை செல்கிறது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. 2 கி.மீ. தொலைவிலான இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது, முழுவதும் பயன்படுத்த முடியாமல் மழையால் சேதமடைந்து, குண்டும் குழியுமாக சாலை இருந்தது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணகான மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சேதமடைந்த சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதேபோல், பழங்காநத்தம் பசும்பொன் நகர்ப் பகுதியில் பல பிரிவுகளாக உள்ள சாலையும் குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் காட்சியளித்தது. இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய சாலை அமைக்கும் பணி, 15 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. இதனால், குண்டும் குழியுமான சாலையில், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அதனால், புதிய சாலை அமைக்கக் கோரி, மேற்கு மண்டலம் மாமன்ற உறுப்பினர் எஸ்.வி. சுதனிடம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசிடம் எடுத்துரைத்து, சாலை அமைப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார்.
இதையடுத்து, பல்வேறு கட்ட நடவடிக்கைக்குப் பின் மக்கள் ஒத்துழைப்புடன் சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து, 2,340 மீட்டர் நீளத்தில், ஒரு கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, வி.கே.பி.நகர் பகுதியில் சாலை செப்பனிட்டு, ஒரு மாதமாக சீரமைப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து, இன்று மேற்கு மண்டல மாமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான எஸ்.வி. சுதன் மேற்பார்வையில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்தன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 10 வருடத்திற்கும் மேலாக சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாமல் இருந்தது. சிறிய மழை பெய்தாலே மழைநீர் தேங்கிவிடும். வாகன ஓட்டிகள் மிக சிரமப்பட்டனர். அடிக்கடி விபத்துகள் நடக்கும். இப்போது புதிய சாலை எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
பழங்காநத்தம் பகுதியில் 15 வருடங்களுக்குப் பின் புதிய சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய தார் சாலை அமைக்க முயற்சி மேற்கொண்ட மேற்கு மண்டல மாமன்ற உறுப்பினர் எஸ்.வி.சுதனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.