திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ. 717 கோடி செலவில் புதிதாக தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
திருச்சியில் மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனம், என்.ஐ.டி ஆகியவை ஏற்கனவே இயங்கி வருகின்றன. இந்த சூழலில் தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு அங்கமாக டைடல் பார்க்கை திருச்சியில் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்பேரில், திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் புதிய டைடல் பார்க் அமைப்பதற்கான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் 6 தளங்களுடன் அமையவுள்ள டைடல் பூங்காவிற்கான கட்டுமான பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், டைடல் பூங்கா அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த 18 மாதங்களில் இதனை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40,000 சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இது சுமார் ரூ. 289 கோடி மதிப்பீட்டில் 12 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த இரு டைடல் பூங்காவிற்கும், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்