சென்னை
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கி வரும் நிலையில், கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்தில் தற்போது புதுவகை கொரோனா தொற்று பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. சாதாரன கொரோனாவை விட 70 மடங்கு அதிகமாக பரவும் திறன்கொண்ட இந்த வைரஸ் இங்கிலாந்தில் பெரும்தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
இங்கிலாந்தில் பரவும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பினால் உலகில் உள்ள பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தக்கு டிசம்பர் 31-வரை தடை விதித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரசை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த 21-ந்தேதி இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் வந்த சென்னை அசோக்நகரை சேர்ந்த 25 வயது மாணவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிலையத்தில் தனியறையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு தொற்றியுள்ள கொரோனாவின் மரபியல் வகைப்பாட்டை கண்டுபிடிக்க, அவருடைய ரத்த மாதிரியை எடுத்து, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தேசிய நுண்கிருமி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையின் முடிவு வருகிற திங்கட்கிழமை தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள், பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்ற உறுதிச்சான்றிதழை பெற்றுதான் தமிழகத்துக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாணவரும்கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்கிறார்.
ஆனால் இடைப்பட்ட 4 நாட்களில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்திருந்தாலும், விமான பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் தொலைபேசி மூலமாகவும், சுகாதாரத்துறை, ஊராட்சித்துறை மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறார்கள். யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் 104 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"