120 New Ulavar Santhai News Tamil : தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் உழவர் சந்தைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவராகவும் இருந்த மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது உழவர் சந்தை திட்டம். சந்தைகளில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் எட்டாக் கனியாக இருந்து வந்தது. இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைப் பொருள்களை விவசாயிகள் நேரடியாக பொது மக்களிடம் விற்று பயன் பெறுவதகாக, 1999-ம் ஆண்டு மதுரையில் முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
மற்ற காய்கறி கடைகளின் விலையை விட, உழவர் சந்தையில் விலை குறைவாக விற்கப்பட்டதால், பெரும்பாலானோர் உழவர் சந்தைகளை நாட் தொடங்கியதால் நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக உருவெடுத்து, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் சுமார் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ‘முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் எதிர்பாரத பல சலுகைகளையும் வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் விதமாக, 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது 8 கோடி செலவில், செம்மொழி பூங்காவை உருவாக்கினார். தற்போது, இது போன்ற பூங்காங்களை தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டமான உழவர் சந்தைகள் கடந்த ஆட்சி காலங்களில் பராமரிப்பின்றி காணப்பட்டது. தற்போது, அவற்றை புனரமைக்கவும், தமிழகத்தில் மேலும், 120 உழவர் சந்தைகளை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அது தொடர்பான முக்கிய முடிவுகள் ஆலோசனைக்கு பின் எடுக்கப்படும். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஸ்டாலின் சொன்னதை செய்வார்’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.