சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை அதிகம் பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதனால் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை என்று மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் 2020-ம் ஆண்டில் உலகையே முடக்கிப் போட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் உருமாறி புதிய வகைகளாக மாறியது குறித்த ஆய்வுகளும் வெளியானது. இதனிடையே, கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை அதிகம் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகைகள் உருவாகியுள்ளன என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆல்பா, பீட்டா, காமா, ஒமிக்ரான், உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், சிங்கப்பூரில் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவல் மற்றும் தற்போது நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும், புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது தொடர்பான அறிவிப்புகள் சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய வகை கொரோனா தொற்று பரவல் குறித்து, இந்தியாவில் பயமோ, பதற்றமோ தேவையில்லை என்றும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று என்பது ஏற்கெனவே இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பின்போது, லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததாக பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிங்கப்பூரில் வேகமாக பரவிவரக்கூடிய ஒமிக்ரான் புதிய வகை வைரஸ் தொற்று ஏற்கெனவே இந்தியாவில் பதிவாகி பாதிப்பில் உள்ளது என்றும், பொதுமக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“