தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் 15 புதிய மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வரலாம் என்பதோடு, அமைச்சர் பதவியை வகிப்பவர்கள் தங்கள் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என தி.மு.க-வில் எழுந்துள்ள புதிய குரல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க-வில் உள்ள 72 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும், மாவட்ட அளவிலான பல்வேறு பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது, இதனால், திமுக நிர்வாகிகள் பலரும் கட்சிப் பதவிகளை நோக்கி காய் நகர்த்தி வருவதால் ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க மாவட்டச் செயலாளர்கல் தேர்தலில், குறைந்தது 15 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு புதிய முகங்கள் நியமிக்கப்படலாம் என கட்சி தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலில், போட்டியிட விரும்பும் தி.மு.க-வினர் செப்டம்பர் 22 முதல் 25க்குள் கட்சித் தலைமையகத்தில் ரூ.25,000 கட்டணத்துடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் பதவிதான் மாவட்ட அளவில் அதிகாரம் மிக்க பதவி. திமுக கட்சி விவகாரங்களில் மாவட்டச் செயலாளர்கள் முக்கியப் பங்காற்றுவதுடன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளை தி.மு.க தலைமை கவனத்தில் கொள்கிறது. அந்த அளவுக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவி என்பது பவர்ஃபுல் பதவியாக உள்ளது.
தி.மு.க-வில் பிப்ரவரி 21, 2020 அன்று தொடங்கிய 15வது உள்கட்சித் தேர்தல், தொற்றுநோய் மற்றும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தி.மு.க தலைமை கட்சியில் மேலும், சில மாவட்டங்களைப் பிரித்தது. தற்போது தி.மு.க அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்களைக் கொண்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில், குறைந்தபட்சம் 15 மாவட்டச் செயலாளர் பதவிக்க்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற தலைமையின் எண்ணம் பற்றிய தகவல்கள் பரவத் தொடங்கியதால், மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற கட்சிக்குள் தீவிர லாபி நடந்து வருகிறது. அதனால், தற்போது பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினாலும், மாவட்ட அளவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார்கள். உள் கட்சி விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தாத அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளை வகிக்க அனுமதிக்கக் கூடாது என்று சில தி.மு.க ஆர்வலர்கள் புதிய குரலை எழுப்பியுள்ளனர்.
ஆனால், அமைச்சர்களின் ஆதரவாளர்களும், அமைச்சர்களும் மாவட்டச் செயலர் பதவிகளை வகிக்கும்போது, தி.மு.க தொண்டர்களின் கோரிக்கைகளை சிறப்பாக நிவர்த்தி செய்ய உதவுவதாகக் கூறுகின்றனர். கட்சிக்குள் பல அதிகார மையங்கள் தோன்றுவதைத் தடுக்கவும், மாவட்டங்களில் கட்சி விவகாரங்களில் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் இது உதவும் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவைப் பெறுவதற்காக இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் இப்போதே லாபி செய்யத் தொடங்கிவிட்டதால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடவடிக்கை சூடுபிடித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “உள்கட்சித் தேர்தலில், ஒரு சில மாவட்டங்களில் செயல்பாட்டாளர்களின் செயல்திறன் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்படுவார்கள். தி.மு.க தொண்டர்களின் ஆதரவின் அடிப்படையில் மட்டுமே பதவிகள் இறுதி செய்யப்படும்.” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”