வருட இறுதிக்காக காத்திருக்கும் மக்கள், தனது சொந்த ஊருக்கு செல்ல பயணிக்கும் பொழுது, அதிக கட்டணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட 49 ஆம்னி பேரூந்துகளிடம் இருந்து ரூ.92,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
வருட இறுதியில் வரும் பண்டிகைகளான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து சிறப்பு கண்காணிப்பு குழு சோதனை நடத்தியது.
ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதுடன் முறையான வரி கட்டாமல் இருந்ததால் ரூ.92,500 அபராதம் விதிக்கப்பட்டது.
பயணிகளிடம் அதிக கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.9,200 திரும்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது இது போன்ற நடவடிக்கைகள் நடக்கும் என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வருவதை ஒட்டி சென்னையில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் ரூ.2,500 ஆகவும், கோவை செல்ல ரூ.2,800 ஆகவும், நெல்லை செல்ல ரூ.3,300 ஆகவும் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
மேலும், பெங்களூரு செல்ல ரூ.2,000 ஆகவும், கொச்சி செல்ல ரூ.2,700 ஆகவும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil