விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்ஏல்ஏக்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில், சபநாயகர் தனபாலின் அறையில் பதவியேற்றுக்கொண்டனர்.
நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், அக்டோபர் 24ம் தேதி என்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற நாராயணன், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலின் அறையில், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியினரின் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதன்மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் என்பது 124 ஆக உயர்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும், குறைந்தபட்ச எம்எல்ஏக்கள் பலம் 118 ஆகும். திமுக 100 எம்எல்ஏக்களுடனும், காங்கிரஸ் 7 எம்எல்ஏக்களுடனும் உள்ளது. அதிமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலைந்துவிடும் என்று திமுக தலைவர்கள் கூறிவந்த நிலையில், அந்த கட்சிக்கு கூடுதலாக இரண்டு எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.