Next time comes at PM, Dubai Tamilan request to Stalin: அடுத்தமுறை துபாய் வரும்போது பிரதமராக வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துபாய் தமிழர் ஒருவர் வேண்டுகோள் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைப்பதற்காகவும், துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 4 நாள் பயணமாக சென்றுள்ள அவர், துபாயில் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
முதல்வருடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர். மேலும் முதல்வரின் மனைவி துர்கா, உதயநிதி மற்றும் கிருத்திகா உதயநிதி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரை அமீரக வாழ் தமிழர்கள் சிறப்பாக வரவேற்று உபசரித்து வருகின்றனர். முன்னதாக, துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதையடுத்து நேற்று துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதையும் படியுங்கள்: ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய வணிகவரி & பதிவுத்துறை; இலக்கை கடந்து சாதனை
இந்த நிலையில், துபாய் எக்ஸ்போவை காண முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் திறந்த வாகனம் ஒன்றில் பயணித்தார். அவருடன் அமீரக அமைச்சர்களும் இந்த வாகனத்தில் இருந்தனர். அதேபோல் அடுத்த வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் இந்த காரில் இருந்தனர். இந்த காரை சுற்றி தமிழர்கள் நின்று அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது அங்கு இருந்த துபாய் தமிழர் ஒருவரிடம் பேசிய துர்கா ஸ்டாலின், ஏற்பாடு நன்றாக இருக்கிறது. நன்றிங்க, போயிட்டு வரேன் என்று காரில் நகர்ந்தபடி கூறினார்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இருந்த தமிழர், முதல்வர் ஸ்டாலினை நோக்கி வேகமாக வர, ஸ்டாலின் தனது கையை கூப்பி அவருக்கு வணக்கம் வைத்தார். உடனே அந்த தமிழர், சார் அடுத்த முறை நீங்கள் பிரதமரா வரணும் சார். இங்கு நீங்க பிரதமரா வரணும் சார். ரொம்ப நன்றி சார் என்று கூறினார். இதை பார்த்த துர்கா, அவரை பார்த்து வணங்கி நன்றி என்பது போல சொன்னார். அதன்பின் பின்னால் இருந்த வாகனம் நோக்கி சென்ற அந்த தமிழர், சார், சூப்பர், ரொம்ப நன்றி என்று உதயநிதி ஸ்டாலினை நோக்கி கூறினார். அவரும் நட்பாக புன்னகைத்துவிட்டு காரில் நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.