கடலூர் நெய்வேலி என்எல்சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில், நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி, தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1விரிவாக்கம், சுரங்கம் 2 என 3 திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு நெய்வேலி அருகே புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (48) ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று 2வது நிலக்கரி சுரங்கத்தில், கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக திடீரென்று கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் அவரது உடலை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, விபத்து குறித்த தகவலறிந்து தொழிலாளியின் குடும்பத்தினரும் உறவினர்களும் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“