நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்.எல்.சி நிறுவனத்துக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் 2வது அலகில் ஜூலை 1-ம் தேதி திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.
இந்த விபத்துக்கு பாய்லர் சரியாக பராமரிக்கப்படாததும் ஒரு கரணம் காரணம் என்று புகார் எழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாய்லர் சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் என்.எல்.சி 2வது அனல் மின் நிலைய முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெய்வேலி என்.எல்.சியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவது தொடர்பாக விசாரணை நடத்த என்.எல்.சி நிறுவனம் விசாரணைக் குழு அமைத்தது. இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நெய்வேலி என்.எல்.சி-யில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக என்.எல்.சி நிறுவனத்துக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"