நெய்வெலி என்.எல்.சி-யில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு வட மாநில இளைஞர்களை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக இளைஞர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்எல்சி பணியாளர்களாக தேர்வு செய்யும் சதி நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “”மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்எல்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு இருக்கிறது. பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.
ஜிஇடி (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்எல்சியில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.
என்எல்சி நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி பணியாளர்கள் நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் பொறியாளர் (GET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், என்.எல்.சி பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதைக் கண்டித்து பிப்ரவரி 15ம் தேதி கண்டனம் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துப்பூர்வ தேர்வு நடைபெற்றது. அதில் 1582 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களில் 4 % மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 96% வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படி குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அண்மைக்காலமாக தமிழ் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே முதலான நிறுவனங்களின் பணி நியமனங்களிலும்கூட இதே போல வட மாநிலத்தவர் திட்டமிட்டு புகுத்தப்படுகின்றனர்.
என்எல்சி நிறுவனம் என்பது மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேறுபட்டது. இது தமிழ்நாட்டினுடைய கனிம வளங்களை எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. இதற்கான நிலங்கள் இந்தப் பகுதி மக்களால் வழங்கப்பட்டவை. எனவே, தமிழக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றிலிருந்து கனிம வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிற இந்த நிறுவனத்தின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். அதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.தமிழகத்தின் வளங்களை மத்திய அரசு சுரண்டுவது மட்டுமின்றி தமிழகத்தின் வேலைவாய்ப்புகளையும் களவாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.
எனவே தற்போது நடத்தப்பட்ட தேர்வை என்எல்சி நிறுவனம் ரத்துசெய்யவேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே பணிகளில் நியமிக்கவேண்டும். அதற்கேற்ப பணிநியமன வரையறைகளை அல்லது தேர்வுமுறைகளை வகுத்திட வேண்டுமென வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் எனது தலைமையில் எதிர்வரும் பிப்ரவரி-15 ஆம் தேதி காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அறிவித்துள்ளார்.
தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள என்.எல்.சி. பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 269 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் மிகப்பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.
தமிழர்கள் சிந்திய குருதியிலும், வியர்வையிலும் உருவான இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வ குடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுக்கொடுத்தனர். ஆனால் இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், அடிமாட்டு கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக உள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் பதவிகளிலும் தமிழர் அல்லாதவரே அதிகாரிகளாக நியமிக்கப்படும்போது இயல்பாகவே தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவது கண்கூடு. இன்றளவும் இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்குப் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், என்எல்சி-யில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வழங்கப்படாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு செயல்பாடானது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
அதனை நிறுவுகின்ற வகையில் அண்மையில் நடைபெற்ற பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது முழுக்க முழுக்க என்எல்சி நிர்வாகத்தின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக என்எல்சி நிர்வாகம் மீது பல்வேறு நிதி, மற்றும் நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது பொறியாளர் தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதிலும் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிக்கும் வகையில் ஏற்கனவே தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பூர்வகுடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்எல்சியிலும் பணிவாய்ப்பினை வடவருக்குத் தாரைவார்ப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறித்துச் சொந்த மண்ணில் அகதிகளாக அடிமையாக்கும் கொடுஞ்செயலாகும். இனியும் இதுபோன்ற தமிழரின் உரிமைகள் கண்முன்னே பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே மத்திய அரசு, முறைகேடாக நடைபெற்றுள்ள என்எல்சி பொறியாளர்த் தேர்வினை உடனடியாகத் திரும்பப்பெற்று, தேர்வு முறைகேடு குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழக இளைஞர்களின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க உரிய அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையினைப் பறிக்கும் மத்திய-மாநில அரசுகளின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் அதனை முறியடிக்க மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.