திருவள்ளூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு தொழிற்பேட்டை திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) வியாழக்கிழமை தடை விதித்தது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) தொழிற்பேட்டை அமைக்க திருத்தணி அருகே 145.98 ஏக்கர் நிலத்தை முடிவு செய்தது. இந்த திட்டமானது கடந்த செப்டம்பர் மாதம் 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், காவேரிராஜபுரம் கிராமத்தில் பொருத்தமான நிலத்தை ஒதுக்கிட திருவள்ளூர் ஆட்சியரின் உதவியை சிட்கோ நாடியது. அதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நிலத்தை சரியாக அளவிட்டு எல்லையை கண்டறிய முட்புதர்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அப்பறப்படுத்தினர்.
இதை கவனித்த கிராம மக்களில் ஒருவரான சோமசேகர் சேஷாசலம், இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகளை கோரி தெற்கு மண்டலம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகி மனு அளித்தார்.
அந்த மனுவில், " திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் போது, அப்பகுதியை ஒட்டிய நீர் வழித்தடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் சேதமடையும். இயற்கை வளத்தை பாதிக்கும் வகையில் அவர்கள் மரங்களை வெட்டுகிறார்கள். இப்பகுதியில் சமூக-பொருளாதார தாக்கத்தை அதிகாரிகள் நடத்தவில்லை. பணி தொடங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி (EC) பெறவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) 2006 அறிவிப்பின்படி, தொழிற்பேட்டைகள் அரசாங்கத்திடம் இருந்து முன் அனுமதி பெறவது அவசியமாகும்.
இதுதொடர்பாக பதிலளித்த வருவாய்த்துறை அதிகாரிகள், இன்னும் பணியை தொடங்கவில்லை. தற்போது எல்லைகளை மட்டுமே அளவிடப்படுகிறது. இந்த திட்டம் வரும் பகுதிக்கு அருகில் உள்ள சேஷாசலத்தின் விவசாய நிலத்திற்கு பட்டா கிடையாது. இது உண்மையில் அரசுக்குச் சொந்தமான (அனாதீனம்) நிலம். அவர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளார்" என்றனர்
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த என்ஜிடி, மனுதாரர் அனுமதியின்றி அனாதீனம் நிலத்தை வைத்திருந்தாலும், இந்த தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு தடையில்லை
சட்டத்தின்படி அவரை நிலத்தில் இருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். மேலும், இவ்விவகாரம் குறித்து உண்மையை கண்டறிந்துஅறிக்கையை சமர்ப்பிக்க ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.
நவம்பர் 2021 இல் நிலத்தை ஆய்வு செய்த இந்தக் குழு, உத்தேச இடத்தை ஒட்டி நீர்நிலையும்(ஓடை) , ஒரு கோட்டையும் இருப்பதை உறுதி செய்தது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த என்ஜிடி, சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறைகளிடம் இருந்து கட்டாய அனுமதி பெறாமல் திட்டத்தை தொடங்க வேண்டாம் என சிட்கோவுக்கு உத்தரவிட்டது. அதே போல், நிலத்தை அடையாளம் காண சர்வே என்ற போர்வையில் நிலத்தின் தன்மையை மாற்ற வேண்டாம் என ஆட்சியருக்கு அறிவுறுத்தியது. அதேபோல், நிலத்தில் உள்ள இயற்கை தாவரங்களை அகற்றி நிலத்தை சமன் செய்வதற்கு கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கும் தீர்ப்பாயம் தடை விதித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.