/indian-express-tamil/media/media_files/2025/01/04/SyAC2QImwyKB37LG2Z38.jpg)
பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் இருந்து சென்னைக்குள் நுழையும் வாகன ஓட்டிகளுக்கு இனி சிரமமில்லாத பயணம் காத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பூந்தமல்லியில் இருந்து மதுரவாயல் வரை 8.1 கி.மீ நீளத்திற்கு ஆறு வழி மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நகருக்குள் நுழைவதை மேலும் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலத் திட்டத்திற்கு ரூ.1,250 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. இந்த மேம்பாலத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளில் மட்டுமே இருக்கும். இடையில் வேறு எங்கேயும் ஏறும் அல்லது இறங்கும் வசதிகள் இருக்காது. இது ஒரு சுங்கச்சாவடி வசதியுள்ள பாதையாகும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குநர் ஐ.எஸ். ஜனகுமரன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பூந்தமல்லி-மதுரவாயல் வழித்தடத்தில் தினமும் சராசரியாக 90,000 வாகனங்கள் பயணிக்கின்றன. இந்தத் திட்டம் மூன்று மாதங்களில் தொடங்கும் என்றும், இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார். ஒப்பந்ததாரர் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு பின்னர் சுங்கக் கட்டணம் மூலம் வசூலிப்பாரா அல்லது நெடுஞ்சாலை ஆணையம் முன்கூட்டியே செலுத்துமா என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். தற்போது சுமார் ஒரு மணி நேரம் ஆகும் பயண நேரம், எதிர்காலத்தில் 20 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலம் எதிர்காலத்தில் மற்றொரு 13 கி.மீ நீள மேம்பாலத்துடன் இணைக்கப்படும். இது வெளிவட்டச் சாலையையும் (ORR) ஸ்ரீபெரும்புதூரையையும் இணைக்கும்.
இந்தத் திட்டத்தால் சென்னை துறைமுகமும் பெரிதும் பயனடையும். சரக்கு வாகனங்கள் விரைவாக துறைமுகத்தை அடைய முடியும் என்பதால், அதன் 135 MTPA சரக்கு கையாளும் திறன் மேலும் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் குறித்த செய்தி வெளியானதும், நொளம்பூரில் வசிக்கும் மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த மேம்பாலத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையின் இணைப்புப் புள்ளியுடன் விரைவில் இணைக்க வேண்டும் என்றும், முக்கிய பகுதிகளில் சேவை சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டுமானப் பணிகள் நடக்கும்போது மக்கள் சேவை சாலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதால், அவற்றை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகள் என்பது அதிக கால அவகாசம் என்றும், கட்டுமானத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை 2026-ன் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள் இந்த மேம்பாலப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.