நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் இன்று (செப்டம்பர் 22) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Advertisment
இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். இதே போல கர்நாடகா மாநில பிரண்ட் ஆப் இந்தியா செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை கோவை வந்தார்.
கோவை ரயில் நிலையத்தில் வைத்து சாதிக் முகமதுவையும் அவரது உதவியாளரையும் பிடித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரயில் நிலையம் முன்பாக உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இஸ்மாயில் மற்றும் சாதிக் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு நான்கு என்ஐஏ அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சாதிக் முகமதுவுடன் வந்த உதவியாளர் கோவை விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார்.
டெல்லியில் வைத்து விசாரணை மேற்கொண்டப் பின்னர் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற தகவல் வெளிவரும் என என்ஐஏ வட்டாரம் தகவல் தெரிவித்தது. முன்னதாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் சோதனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஒப்பணக்கார வீதி, ஆத்துப்பாலம் , சாய்பாபா காலனி உள்பட பல்வேறு இடங்களில் பிஎப்ஐ , எஸ்டிபிஐ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil