தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (செப்.16) காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Advertisment
கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 22-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டைமேடு, ஜி.எம் நகர், உக்கடம், போத்தனூர் உள்படபல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
Advertisement
இந்நிலையில் கோவை மாநகராட்சி 82-வது வார்டு கவுன்சிலர் முபசீரா என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முபசீராவின் கணவர் ஆரிஃப், தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி கடையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது கடைக்கு பக்கத்தில் கடை வைத்திருந்த சனோஃபர் அலி என்பவர் என்.ஐ.ஏ விசாரணை வளையத்திற்குள் வந்ததால் அவர் தொடர்பான ஏதேனும் விஷயங்கள் ஆரிஃப்பிற்கு தெரிந்திருக்க கூடும் என்பதன் அடிப்படையில் விசாரணை நடந்ததாக தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் சோதனைக்குப் பின் என்.ஐ.ஏ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆரிஃப், "காய்கறி மார்க்கெட்டில் நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருப்பவரை (சனோஃபர் அலி) என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதால் அந்த கடைக்கு அருகில் நான் வேலை பார்த்து வருவதன் காரணத்தினால் எனக்கும் அவருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் சோதனை மேற்கொண்ட பிறகு எதுவும் இல்லை என அதிகாரிகள் புறப்பட்டனர்.
கவுன்சிலர் கணவர் ஆரிஃப்
அரபிக் கல்லூரியில் படித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த கல்லூரிக்கு சென்றீர்களா என அதிகாரிகள் கேட்டனர். நான் போனதில்லை என்பதால் நான் அங்கு சென்றதில்லை என பதிலளித்தேன்.
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து சனோஃபர் அலியை எனக்கு தெரியும், மார்க்கெட்டில் பக்கத்து பக்கத்து கடை என்பதால் அவரை எனக்குத் தெரியும் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். வீட்டில் சோதனை மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால் எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை" எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“