தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாக தகவல் கிடைத்தையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நபரும், பிரபல யூடிப்பருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல சென்னை, கோவை, சிவங்கை மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலணாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி வயலூர் சாலையில் உள்ள சண்முகா நகர் 7- வது தெருவில் வசிக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர், பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சீமான் அறிவித்தார், என்றாலும் இவர் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தீவிர கொள்கை பரப்புச் செயலாளராக இடம் பெற்று வருகிறார். சீமானின் நெருங்கிய நண்பராகவும் இருக்கும் இவர், `சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதும், அந்த சமூக வலைதளங்களில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாகச் சித்திரித்து பல்வேறு வீடியோக்களை சாட்டை துரைமுருகன் வெளியிட்டு வந்ததால் இவர் சாட்டை துரைமுருகன் என அழைக்கப்பட்டார்.
கடந்த 2021 இல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்தார். இதனால் சட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் நான்கு பேர் அவரை கடுமையாக தாக்கினர். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போது கைது செய்யப்பட்டார்.
தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஓமலூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு இவர் மீது பதியப்படுகிறது. துப்பாக்கி, வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி என்று சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் இந்த வழக்கில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சியின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி சாட்டை முருகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் நடந்த சோதனையில் இரண்டு புத்தகங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். வரும் ஏழாம் தேதி சென்னையில் நேரடியாக ஆஜராகுமாறு சம்மன் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெறும் சோதனையையடுத்து அவர்களின் வீடுகள் முன்பு நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வருகின்றனர்.
தீவிரவாதத்தை தடுப்பது, வெளிநாடுகளில் இருந்து தவறான முறையில் நிதி பெறுவது என குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“