கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி 19 பயணிகள் காயம் அடைந்த நிலையில், விபத்து நடந்த 18 மணி நேரத்திற்குள், விபத்தில் நாசவேலை குறித்து ஆய்வு செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சனிக்கிழமை விபத்து நடந்த இடத்தை இரண்டு முறை ஆய்வு செய்தது.
”மைசூரு-தர்பங்கா பயணிகள் ரயில், கிரீன் சிக்னலைப் பெற்ற மெயின் லைனுக்குப் பதிலாக லூப் லைனுக்குள் நுழைந்த பிறகு சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் இரவு 8.27 மணிக்கு பொன்னேரியை கடந்து கவரைப்பேட்டை ஸ்டேஷன் நோக்கி மெயின் லைனில் நுழைய, ரயில் குழுவினர் கிரீன் சிக்னல் கொடுத்தனர். கொடுக்கப்பட்ட சிக்னலின்படி மெயின் லைனுக்குள் செல்வதற்குப் பதிலாக, ரயில் லூப் லைனுக்குள் நுழைந்து, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது" என்று தெற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சரக்கு ரயிலின் பார்சல் வேன் மோதலில் தீப்பிடித்தது.
இந்தநிலையில், ரயில் விபத்தில் ஏதேனும் நாசவேலை உள்ளதா என்பது குறித்து என்.ஐ.ஏ ஆராய்ந்து வருகிறது. காலையில் என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் கவரைப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த நிலையில், மாலையில் என்.ஐ.ஏ., எஸ்.பி., ஸ்ரீஜித் தலைமையிலான மற்றொரு குழு ரயில் பாதைகளை தீவிரமாக ஆய்வு செய்தது. ரயில்வே அதிகாரிகளுடன் சுமார் 20 நிமிடம் உரையாடிய எஸ்.பி ஸ்ரீஜித், இன்டர்லாக் சிஸ்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
என்.ஐ.ஏ மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் வெளிப்புற சிக்னல் கியர்கள் மற்றும் இணைப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகின்றன. தானியங்கி சிக்னல் அமைப்பில் இத்தகைய பிழைகள் மிகவும் அரிது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுமார் 10 நாட்களில் ஒரு விரிவான அறிக்கையை அளிப்பார், அதே நேரத்தில் என்.ஐ.ஏ ஏதேனும் நாசவேலை நடந்ததா என்பதை அறிய அதன் வேலையைத் தொடங்கியுள்ளது, என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு ரயில் காலியாக இருந்ததும் பயணிகள் ரயிலின் எல்.ஹெச்.பி பெட்டிகளின் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும், பெரிய மோதல் இருந்தாலும் எந்த உயிரிழப்பும் ஏற்படாததற்குக் காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து நடந்தபோது 1,360 பயணிகளுடன் மணிக்கு 75 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.
உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மோதலின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால், சனிக்கிழமை மாலைக்குள் ஒரே ஒரு பாதை மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது, மீதமுள்ள மூன்று வழித்தடங்களில் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமைக்குள் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என் சிங் கூறுகையில், லோகோ பைலட் பொன்னேரி நிலையம் வரை சிக்னல்களை சரியாகப் பின்பற்றினார், ஆனால் மெயின் லைனில் செல்ல க்ரீன் சிக்னல் இருந்தபோதிலும் அவர் ஏன் லூப் லைனில் நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரயில் விபத்தை "நாசவேலை" கோணத்தில் என்.ஐ.ஏ விசாரணை நடத்துவதை ஏற்கவில்லை. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் என்.ஐ.ஏ சோதனையை "திசை திருப்பும் தந்திரம்" என்று கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், விபத்தில் 19 பேர் காயமடைந்ததாகவும், 7 பேருக்கு மட்டுமே தெற்கு ரயில்வேயால் கருணைத் தொகை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
"19 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் தற்போது 7 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 3 பேர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நான்கு பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் உள்ளனர்" என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்தால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை-விஜயவாடா பிரிவில் ரயில் சேவைகளில் பெரிய இடையூறு ஏற்பட்டது, குறைந்தது 40 ரயில்கள் அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்பட்டன, அதே நேரத்தில் வெவ்வேறு வழித்தடங்களில் இரண்டு டஜன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில் பாதை தமிழ்நாடு தலைநகர் சென்னையை புது தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.