திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாம் உட்பட தமிழகத்தில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ.வைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இலங்கை, வங்காளதேசம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இந்திய வாழ் தமிழர்கள் உள்பட பாஸ்போர்ட் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் முகாமிட்ட பஞ்சாப் முதல்வர் மான்: தமிழக முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு
இப்படி அடைக்கப்பட்டவர்களில் பலர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், சிலர் தங்களது தண்டனை காலம் முடிவடைந்த நிலையிலும் தங்களை விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதாகக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம்..
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி திருச்சி மத்திய சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 57 செல்போன்கள், 2 ஹார்டு டிஸ்குகள், 8 லேப்டாப்கள், 8 வைபை மோடங்கள், பணபரிவர்த்தனை ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு எடுத்துச்சென்றனர்.
மேலும், கேரளாவில் ரூ1,500 கோடி போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டதில், 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், டெல்லியில் நடைபெற்ற குற்ற சம்பவம் தொடர்பாகவும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகளின் பலதரப்பட்ட விசாரணையின் இறுதியில், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சிலரின், அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் மீண்டும் சோதனை நடத்துவதற்காக கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது. 8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறப்பு முகாம் என்பது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த 9 பேரை விசாரணைக்கு அழைத்து செல்ல மாவட்ட ஆட்சியரிடம் முறையாக ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனால் கேரளா கொச்சினிலிருந்து வருகை புரிந்துள்ள எஸ்.பி தர்மராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்பு ஒன்பது பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆட்சியரிடம் நாம் கேட்டபோது; சிறைக்கு வந்திருக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முறையான ஆவணங்கள் மற்றும் 9 பேர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கேட்டிருந்தார்.
நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர் என் ஐ ஏ அதிகாரிகள்.
இதைத் தொடர்ந்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 9 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமை எஸ்பி தர்மராஜ் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு சென்று இலங்கை வாழ் தமிழர்கள் 9 பேரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது மேற்கண்ட இலங்கை தமிழர்கள் 9 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வு சிறப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டு ஆய்வு செய்து இரவு 9 பேரை மட்டும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil