ஹிஸ்பு-உத்-தஹீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று (செப்.24) காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்து, விசாரணை செய்தனர்.
இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூடியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப் மற்றும் முகமது அலி உமாரி ஆகிய 6 பேரை பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் தலா ஒரு இடத்திலும் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“