Advertisment

24 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை: 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' - எஸ்.டி.பி.ஐ அறிக்கை

பா.ம.க ராமலிங்கம் கொலை வழக்கு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NIA raids 24 places in TN, SDPI statement in tamil

பா.ம.க ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது.

க.சண்முகவடிவேல்

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த எஸ்.நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உட்பட பலரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விழுப்புரம், நெல்லை உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சி பீமநகர் பண்டரினாதபுரம் ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல்கான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்சல் கான் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ள நிலையில் சோதனை தீவிரமடைந்திருக்கின்றது.

மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பான 2 சாட்சிகளுடன் என்.ஐ.ஏ. ஆய்வாளர் ரஞ்சித்சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் குறுந்தகவல்கள், லேப்டாப் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தனர்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தில் உள்ள ரசித் முகமது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் உள்ள அப்பாஸ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த 3 அதிகாரிகள், வீட்டி ற்குள் சென்று ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு, அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

சோதனையின் போது வீட்டில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். சோதனையையொட்டி அவரது வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை 8.45 மணி வரை நடந்தது. பின்னர் அப்பாசை என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தெரிவித்து விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி, அதிராம்பட்டினம், வடக்கு மாங்குடி, திருமங்கலக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை நடராஜபுரம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டுக்கு இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். பின்னர் கதவை பூட்டிவிட்டு சோதனையை தொடர்ந்தனர். இதற்காக வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் ஏதாவது ஆவணங்கள் உள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, அதிராம்பட்டினம் ஆசாத் நகர் காஜாவுதீன், வடக்கு மாங்குடி புருகானுதீன் உள்பட 9 பேர் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பேரளந்தூர் தெற்கு பட்டக்கால் தெரு நிஷார்அகமது (38) வீட்டிலும் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விழுப்புரம்-புதுவை மெயின் ரோட்டில் உள்ள தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் பாபு. இவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை 6.30 மணியளவில் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த (என்.ஐ.ஏ.) 5-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பாபு அங்கு இல்லை. அதனால் அதிகாரிகள் அவரது தாய் மற்றும் சகோதரரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

பாபு கடந்த சில ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார் என்ற தகவல் தெரிய வந்தது. ஒரு மணி நேரம் விசாரணையை முடித்துக் கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முபாரக்கின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர். திருப்பூர் சாமுண்டிபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள குலாம்காதர் கார்டன் 8-வது வீதியில் உள்ள முபாரக் பாட்சா(வயது 42) என்பவரது வீட்டிற்கு இன்று காலை 5-30மணிக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் பல்வேறு அறைகளுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். காலை 5-30மணிக்கு தொடங்கிய சோதனை 9-30 மணி வரை 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முபாரக் பாட்சா தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் பேச்சாளர். தற்போது எஸ்.டி.பி.ஐ., கட்சியில் நிர்வாகியாக உள்ளார். என்.ஐ.ஏ., சோதனையையொட்டி திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் என்ற அப்துல் ரசாக் (வயது 67). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி. இவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரி கள் வந்தனர். இன்ஸ்பெக்டர் குல்தீப்சிங் தலைமையில் அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்துல் ரசாக் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் உள்ளதா? எனவும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ. சோதனையையொட்டி அப்துல் ரசாக் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூர் காமராஜர் நகரில் வசிக்கும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ஜாகீர்உசேன் என்பவரது வீட்டிலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

publive-image

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்கள். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் நடவடிக்கையாகும்.

கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்டிபிஐ கட்சி தேர்தல் அரசியல், போராட்ட அரசியல் மட்டுமின்றி பேரழிவு காலங்களிலும் மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. ஆளும் அரசுகளின் கவனத்துக்கு மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது. இது தமிழ்ச் சமூகம் அறிந்த விசயம். பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு ஜனநாயக முறையில் செயல்பட்டுவரும் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவானது.

இந்த சூழலில் எஸ்டிபிஐ கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசு தனது ஏவல்துறையான என்ஐஏ மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஒரு தெளிவான, வெளிப்படையான மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வீட்டில் நடைபெற்றுவரும் இத்தகைய சோதனை நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நடைபெற்றுவரும் இத்தகைய அடக்குமுறைகளை சட்டரீதியாக எஸ்டிபிஐ. கட்சி எதிர்கொள்ளும். மத்திய அரசின் ஏவல்துறையான என்ஐஏவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்ச்சமூகமும், அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Nia Sdpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment