தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், லேப்டாப், போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தொடர்புடைய பிரமுகர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்ட சோந்தனையில், முக்கிய ஆவணங்கள், லேப்டாப், 7 மொபைல் போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென்டிரைவ்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதவலர்களாக செயல்பட்ட விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் சேலத்தில் 3 பேர் எல்.டி.டி.இ தொடர்புடைய நபர்கள் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்.டி.டி.இ போன்ற அமைப்புடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனை நிறைவடைந்த நிலையில், அவர்களை பிப்ரவரி 5 மற்றும் 7 தேதிகளில் விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“