சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று(நவ.8) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ சோதனை செய்கின்றனர். சோதனைக்கான முழுமையான காரணம் சோதனைக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் போலி ஆதார் அட்டையுடன் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஊடுவி உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுவது தெரியவந்தது.
படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் என்பவரையும் என்.ஐ.ஏ கைது செய்தது. இவர்களும் போலி ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“