நைஜீரியப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற 2 பேர் சிறையில் அடைப்பு!

நைஜீரிய நாட்டிலிருந்து சென்னைக்கு படிக்க வந்த இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வாலிபர்கள்.

சென்னையில் படித்து வந்த, நைஜீரியப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அடுத்த வண்டலூர் அருகிலுள்ள ஓட்டேரி பகுதியில் நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், மற்றொருவர் தாம்பரம் கிருஸ்தவ கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

நேற்றிரவு (ஜூன்,12) இருவரும் கல்லூரிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி ஓட்டேரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இருவரும் தனியாக நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த 2 இளைஞர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர்.

மாணவிகள் இருவரும் தைரியமாக இருவரையும் திருப்பித் தாக்கினர். இதைப் பார்த்த அக்கம் பக்கம் இருந்த மக்களும் அவர்களுக்கு உதவ முன் வந்தனர். மக்கள் கூடுவதை அறிந்ததும், இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.

இந்த சம்பம் குறித்து நைஜீரிய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவி கோரப்பட்டது. படிப்பு முடிந்தவுடன் சொந்த நாடு செல்ல திட்டமிட்டிருந்த மாணவிகள் இருவருக்கும் இந்த வழக்கால் தாமதம் ஆகாமல் இருக்க தூதரக அதிகாரிகள் உதவுவதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹைத்மெனி கூறும் போது, ”கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்கள். முறையான புகார் கிடைத்த பின்பு, முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்படும்” என்றார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஐபிசி 354(a), 323, 294(b), மற்றும் 506(II) பிரிவுகளின் கீழும், தமிழ்நாடு பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இருவரும் இன்று காலை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

×Close
×Close