Night travel ban on Erode Dhimbam Ghat Road : ஈரோடு மாவட்டம் கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 958ல் அமைந்திருக்கும் பண்ணாரி - காரப்பள்ளம் சாலையில், காட்டு விலங்குகள் சுதந்திரமான நடமாடுவதை உறுதி செய்யும் பொருட்டு விதிக்கப்பட்ட “இரவு நேர போக்குவரத்து தடை உத்தரவு" அங்குள்ள விவசாயிகள், விவசாய கூலிகளை பாதித்துள்ளது. பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
திம்பம் இரவு நேர போக்குவரத்துத் தடை: தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் முடிவு
மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவால் விவசாயிகள், விவசாய கூலிகள் அடையும் பிரச்சனைகள் என்ன என்பதை உள்ளூர் மக்களிடம் கேட்டு அறிந்து கொண்டது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். பண்ணாரி அம்மன் சோதனைச் சாவடி முதல் காரப்பள்ளம் சோதனைச் சாவடி வரையிலான 22 கி.மீ சாலையை இரவு நேரத்தில் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் 2019ம் ஆண்டு விதித்த தடையை உடனே அமல்படுத்த வேண்டும் என 08.02.2022 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. 10.02.2022 முதல் இந்த தடை அமலில் உள்ளது.
கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்
சி.பி.எம். மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் ஈரோடு ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் எஸ். மோகன் குமாரிடம் இரவு நேர போக்குவரத்து தடை குறித்து பேசிய போது, “2019ம் ஆண்டு 12 மணி நேரம் விதிக்கப்பட்ட தடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், அது செயல்பாட்டுக்கு வரவில்லை. மாலை 6 மணி முதல் - காலை 6 மணி வரை பெரிய மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கார், டெம்போ மற்றும் அரசு பேருந்துகள் மாலை 6 முதல் 9 மணி வரை அனுமதிக்கப்படுகின்றன். மற்ற அலுவல்களுக்காக கர்நாடகா செல்ல விரும்பும் மக்கள் மேட்டூர், ஓசூர் வழியாக கூட கர்நாடகா செல்லலாம்” என்று கூறிய அவர், “ வாழ்வாதாரத்திற்காக இந்த சாலையையே நம்பி இருக்கும் மக்களின் நிலை என்ன? ஒரு அவசர மருத்துவத் தேவை என்றாலும் எப்படி நாங்கள் மருத்துவமனைக்கு செல்வது? ஆம்புலன்ஸ்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து எங்கள் ஊர் வந்து சேர்வதற்குள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?” என்று கேள்வி எழுப்புகிறார்.
மிளகாய், தக்காளி, பாகற்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, ராகி, கம்பு, மக்காச்சோளம் என்று இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்டு வருகிறனர். விளைப் பொருட்கள் அதிக அளவில் மேட்டுப்பாளையத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது. 2 பக்கமும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் நிற்கின்ற போது சரியான நேரத்தில் சந்தைக்கு செல்வது கேள்விக்குறியாகிறது. இரவு நேர போக்குவரத்து தடையால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது என்றும் கூறுகிறார் அவர்.
BC அங்கீகாரம் கிடைத்தும் TNPSC-யில் சாதிப் பெயர் இல்லை – அல்லாடும் நீலகிரி திய்யா மக்கள்
பாதிக்கப்படும் பழங்குடி விவசாயிகள்
தாளவாடி பகுதியில் சிறுதானியங்கள், கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பாக்கு போன்றவை 20 ஆயிரம் ஹெக்டரிலும், 5 ஆயிரம் ஹெக்டரில் தோட்டப் பயிர்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தலைமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்களில் ஊராளி பழங்குடிகள் விவசாயம் வருகின்றனர். சிலர் விவசாய கூலிகளாக பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர். தாளவாடி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இங்கே குத்தகைக்கு நிலத்தை வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவநத்தம் பகுதியில் விவசாயம் செய்து வரும், ஊராளி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சிவமூர்த்தி (28), “வருடத்திற்கு இரண்டு வெள்ளாமை நாங்கள் செய்கிறோம். மலைப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு யானை, காட்டுமாடு, பன்றிகள் போன்ற ஜீவன்களிடம் இருந்து பயிரைக் காப்பாற்றி, சந்தைக்கு கொண்டு செல்வதே பெரிய வேலை தான். அங்கே நல்ல விலைக்கு ஏலம் போனால் தான் எங்கள் மக்கள் அன்றாட பணிகளைப் பார்க்க முடியும். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இரவு நேர தடை பழங்குடி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்.
மாவநத்தம் தாண்டியும் மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள், விவசாய கூலிகளாக அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களுக்கு செல்கின்றனர். போக்குவரத்து தடை மற்றும் சரியான நேரத்திற்கு பேருந்து வராத காரணத்தால் பல மைல்கள் நடந்தே தங்களின் கிராமங்களுக்கு திரும்பி வருகின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்துள்ள நிலப்பகுதியில் தனியே நடந்து வருவது என்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மேலும் விவரிக்கிறார் சிவமூர்த்தி.
குப்பையில் காய்கறிகளைக் கொட்டுகின்றோம்
தாளவாடி விவசாயிகள் சங்க நிர்வாகி கண்னையன் (53) இது குறித்து பேசும் போது, ”இங்குள்ள 10 கிராம பஞ்சாயத்துகளில் 70 முதல் 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்வாரியான விவசாயிகள் மழை நீரையே நம்பி, தினசரி உணவுத் தேவைகளுக்கான காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். சரியான நேரத்தில் காய்கறிகள் மார்கெட்டுக்கு செல்லவில்லை என்றால் ஏலத்தில் குறைவான விலைக்கே எடுக்கப்படும். ஏலத்தில் நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் நஷ்டத்தில் காய்கறிகளை விற்கும் நிலை உருவாகிறது. சில நேரங்களில் தாமத்தால், காய்கறிகள் அழுகிவிடுகின்றன. அவற்றைக் குப்பையில் கொட்டிவிட்டு வீடு திரும்பும் சூழலுக்கு தற்போது ஆளாக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.
தாளவாடி சந்தை இரவு நேர சந்தையாக செயல்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் 58 வகையான காய்கறிகள் தாளவாடியில் உள்ள 10 காய்கறி மண்டியில் லோடு ஏற்றப்பட்டு அடுத்த நாள் காலை “ஃப்ரெஷாக” ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட், ஈரோடு, திருச்சி, மதுரை, சென்னை மார்கெட்டுகளில், மக்களுக்கும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் கிடைக்குமாறு விற்பனைக்கு வைக்கப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு 750 சிறிய டெம்போ ரக வாகனங்கள் காய்கறி சந்தைகளை நோக்கி சென்று கொண்டிருந்தன.
”காய்கறிகளுக்கு சரியான ரேட்டு மார்க்கெட்டுல கெடைக்கணும்னா, சரியான நேரத்துக்கு மார்க்கெட்டுல இருக்கணும். ஃப்ரெஷ்ஷாவும், தரமானதாவும் இருந்தாதான் வாங்குவாங்க. காலைல 4 முதல் 7 மணிக்குள் ஏலம் விட்டு, அனைத்து காய்கறிகளையும் மொத்த-சில்லறை வியாபாரிகளும் வாங்கிட்டு போய்ருவாங்க. இரவு நேர போக்குவரத்து தடையால, காலைல 8 மணிக்கு கொண்டு போய் இந்த காய்கறிகளை வச்சா, யாரு வாங்குவாங்க? சொந்தமா வண்டி வச்சுக்குற அளவுக்கு இங்க வசதி படைச்ச விவசாயின்னு ஒருத்தரும் இல்ல. ஒரு நாள் நைட்டோட முடியுற காரியத்துக்கு, விக்கிற டீசல் விலைக்கு ஏத்துன வாடகையோடு, இப்போ வண்டிக்கெல்லாம் ரெண்டு நாள் வாடகை தர வேண்டியதா இருக்கு” என்று கள நிலவரம் என்ன என்பதை விவரித்தார் கண்னையன்.
நஷ்டத்திற்கு தான் வியாபாரமே நடக்கிறது
தாளவாடியில் அமைந்திருக்கும் மண்டியில், விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி சந்தைகளில் விற்பனை செய்யும் ஜி.எம். அக்ரம் (43) இது குறித்து பேசிய போது, “ஈரோடு சந்தையில் ஒரு பொருளை விற்க வேண்டும் என்றால் நடுராத்திரி 12 மணிக்கெல்லாம் அங்க சரக்கு போய் சேந்திருக்கணும். இரண்டு நாளைக்கு முன்னாடி நான் இங்க இருந்து மாலை 5 மணிக்கு வெங்காயம் லோடு அனுப்புனேன். காலைல 3 மணிக்கு தான் வண்டி அங்க போய் சேந்தது. அன்னைக்கு வெங்காயம் வெல போகல. ஒரு நாள் காத்திருந்து அடுத்த நாள் காலைல தான் ஏலத்துல வித்துட்டு வண்டி தாளவாடி வந்தது.
பச்சை மிளகாயா இருந்தாலும் சரியான நேரத்துக்கு போனா தான் வாங்குற வெலையோடு பத்தோ பதினஞ்சோ கூடுதலா வெச்சு விக்க முடியும். தாமதம் ஆனா, அடுத்த நாள்ல நஷ்டத்துக்கு அத வித்துவிட்டு வர்றதா இருக்கு. ஒரு கிலோ பச்சை மிளகாய்க்கு பதினஞ்சு ரூபாய் நஷ்டம் அடைஞ்சா, விவசாயி நெலம என்ன ஆகும்னு யாரும் யோசிக்கிறது இல்ல” என்று தெரிவித்தார்.
தெற்கு கர்நாடக பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விலைப் பொருட்களை தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்யவும் அதிகமாக இந்த பாதையையே தேர்வு செய்கின்றனர். தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, தமிழகத்தை நம்பியிருக்கும் இதர மாநில விவசாயிகளும், வியாபாரிகளும் இதனால் பாதிப்படைகின்றனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டல்பேட்டையில் விவசாயம் செய்து வரும் பாலக்கிருஷ்ணனிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசியது. திம்பம் சாலையை நம்பியிருக்கும் கர்நாடக விவசாயிகளின் நிலை குறித்து அவர் பேசிய போது, “மைசூர், குடகு, மண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு, தமிழகம் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. ஏற்கனவே கேரளா செல்லும் கோழிக்கோடு சாலையும், உதகை செல்லும் முதுமலை சாலையும் இரவு 9 மணிக்கு, தடை காரணமாக, மூடப்பட்டுவிடுகிறது. தற்போது திம்பம் சாலையும் மூடப்பட்டுள்ளதால் நாங்கள் நஷ்டம் அடைந்துள்ளோம். காய்கறிகளை தார்ப்பாய் போட்டு சுத்தி எடுத்து வந்து மணிக்கணக்கில் எல்லையில் காத்திருப்பதால் சந்தைக்கு வரவே தாமதம் ஆகிவிடுகிறது. சூட்டில் வெங்காயம், தக்காளி அழுகிவிடுகின்றன. நிறைய காய்கறிகள் நிறம் மாறிவிடுகின்றது. காய்கறிகள் ”ஃப்ரெஷ்ஷாக” இல்லை என்றால் நல்ல விலைக்கு ஏலத்தில் போகாது. தமிழகம், கேரளம் செல்லும் 3 பாதைகளும் அடைக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றோம். பலரும் பெங்களூர் சுற்றி தமிழகம் வர சொல்கிறார்கள். எவ்வளவு மணி நேரம் இதனால் விரையம் அடையும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. டீசல் விலை முதற்கொண்டு எதுவும் எங்களுக்கு சாதகமாக இல்லை” என்று தெரிவிக்கிறார் பாலகிருஷ்ணன்.
கர்நாடக விவசாயிகளுக்கு திம்பம் சாலை மிக முக்கியமான பொருளாதார இணைப்புப் பாலம். எனவே இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கர்நாடக ராஜ்ய ரைத்தா சங்கம் என்று தங்களின் கோரிக்கையை முன்வைத்து, சாம்ராஜ்நகர் மாவட்ட தலைவர் ஹொன்னூரு பிரகாஷ் தலைமையில் பிப்ரவரி 10ம் தேதி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சாலைகள், பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கிய அடிப்படை தேவையாக இருக்கிறது. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது சாலையும் ரயில் போக்குவரத்தும் தான். தன்னுடைய உற்பத்திப் பொருளை சுதந்திரமாக விற்பனை செய்யவும், தனிநபர் தன்னுடைய விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக நடமாடவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நாட்டில் வன உயிர்களை மேற்கோள்காட்டி அவ்வுரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
வன உயிரினங்கள் சாலை விபத்தில் இருந்து தப்பிக்க எத்தகைய நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது? கட்டுமானங்களில் புதிய, பல்வேறு நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும், தொழில்நுட்பங்கள் நமது சாலைகளில் உட்புகுத்தப்பட்டுள்ளனவா? எத்தனை இடங்களில், ஆனைமலைக் காடுகளில் இருப்பது போன்று சாலைகளின் நடுவே தொங்கும் மரப்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது? யானைகள், மான்கள் போன்ற அளவில் ஓரளவு பெரிதாக இருக்கும் விலங்குகள் சாலைகளை கடக்க எத்தகைய திட்டங்கள் உள்ளன? என்ற கேள்விகளுக்கு தீர்வு காண்பதே வனவிலங்குகளை சாலை விபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும். வாழ்வாதாரத்திற்காக இந்த சாலையை நம்பியிருக்கும் மக்கள் மீது விதிக்கப்படும் ”இரவு” நேர தடை, வன உயிரினங்களை பகல் நேர விபத்தில் இருந்து பாதுகாக்குமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது ஈரோடு நிர்வாகத்தின் செயல்பாடு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.