New Update
00:00
/ 00:00
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் (6,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய முக்கிய மலை வாழிடங்கள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.
அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரால் குறிப்பாக நிலச்சரிவினால் 284 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய நிலச்சரிவுகளைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணையின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் கோடப்பமந்து அருகில் நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பமான மண் ஆணி அமைத்து, நீர் விதைப்பு முறை மேற்கொண்டு ஜியோ கிரிட் முறையில் மண்ணின் உறுதித்தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் முறை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இதில், மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் மூலம் மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்க்கப்படுகிறது.
பொதுவாக மண் சரிவைத் தடுக்க கான்கிரீட் தாங்கு சுவர்கள் கட்டப்படுவதால், மலையின் மேற்பரப்பில் தாவரங்கள் வளராத சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக ஜியோ கிரிட் எனப்படும் பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட முப்பரிமான இரும்புக் கம்பிகள் மூலம் வலுவூட்டபட்ட பாய்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஜியோ கிரிட் பாய்கள் செங்குத்தான மலையில் புல்விதைகள் விதைக்கப்பட்ட மேல்பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகிறது.
வால்பாறை மலை, கொல்லி மலை, ஏற்காடு மலை ஆகிய இடங்களில் புதிய தொழில்நுட்பத்தில் மண் ஆணி முறையைச் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்போது நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு மழைக்காலங்களில் நிலச்சரிவு அபாயத்தைத் தவிர்க்கும் காலம் விரைவில் நடைமுறைக்கு வரும், என்று தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.