தமிழகத்தில் நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூதல் தலைமைப் செயலாளர் ஜெ. ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சா.ராமசந்திரன் தொடங்கிவைக்க உள்ளனர்.
முதல்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் . இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திட்டம் விரைவுப்படுத்தப்படும். சர்வதேச சிறு தானிய ஆண்டையொட்டி, ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ள ராகி விநியோகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இந்திய உணவுக் கழத்தின் மூலம் 1,350 மெட்ரிக் டன் ராகியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த தேவைப்படும் கூடுதல் ராகியை கர்நாடக மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும். ராகியை அதிக அளவில் சாகுபடி செய்யும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுதானிய சாகுபடி செய்யும் பிற மாவட்டங்களில் படிப்படியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று கூறினார்.