நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்யவந்தபோது, நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்த அ.தி.மு.க - பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதகையில் காரணமின்றி பா.ஜ.க தொண்டர்கள் மீது தடியடி நடத்திய நீலகிரி எஸ்.பி-யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இன்று (25.03.2024) அரசியல் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நீலகிரி தொகுதி வேட்பாளராக பா.ஜ.க சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, எல்.முருகன் இன்று (25.03.2024) பா.ஜ.க தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று உதகை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அந்த நேரத்தில், அ.தி.மு.க சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் அ.தி.மு.க தொண்டர்களுடன் வந்தார்.
அப்போது, தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் கட்சியினர் இருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் கூட்டமாக நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்த பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் மீது லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதில் பா.ஜ.க தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பா.ஜ.க தொண்டர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஊட்டி எஸ்.பி சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யும்வரை போராட்டம் தொடரும்” எனக் கூறி எல்.முருகன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தின்போது எஸ்.பி சுந்தரவடிவேல், தடியடி தொடர்பாக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்த அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று காயமுற்ற தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“