நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சி.சி.டி.வி காட்சிகளின் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில், முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சி.சி.டி.வி காட்சிகளில் துண்டிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியின் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி முகவர்கள் அமரும் அறையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை (டிவி திரை) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பாகாமல் காட்சிகள் துண்டிக்கப்பட்டதால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
இதை தொடர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு எந்த காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டு உள்ளது என ஆய்வு மேற்கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்சிகள் பதிவாகக்கூடிய பெட்டி சூடான காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டது எனவும், அந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களால் 20 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த டிவி ஸ்கிரீனில் காட்சி திரைகள் செய்லபட தொடங்கின எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
குறிப்பாக திரைகளில் மட்டுமே காட்சிகள் தெரியவில்லை, ஆனால் கண்காணிப்பு பதிவுகள் அனைத்தும் பதிவாகி உள்ளது என அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, நீலகிரியில் 70.93% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நீலகிரியில் தி.மு.க சார்பில் ஆ.ராசாவும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பா.ஜ.க கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“