35 வயதுள்ள ஆண் காட்டு யானை கூடலூர் நகரை ஒட்டிய சில்வர் கிளவுட் சுற்றுவட்டார பகுதிகளில் காயத்துடன் மூன்று வருடமாக சுற்றித்திரிந்தது. சில்வர் மான்ஸ்ட்ரா என்று அழைக்கப்பட்ட அந்த யானை கடந்த மாதம் 16ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி போடாமலேயே ஈப்பங்காடு வனப்பகுதியில் பிடிக்கப்பட்டது. பிறகு சில்வர் மான்ஸ்ட்ரா கும்கி யானைகள் உதவியுடன் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அந்த யானைக்கு இந்த யானைக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். நாமக்கல்லில் இருந்து வந்த சிறப்பு கால்நடை மருத்துவக் குழுவினரும் மான்ஸ்ட்ராவிற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை (09/07/2021) யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் யானையின் உடலில் உள்ள புண் ஆறி வந்ததாகவும், ஆனால் யானை பிடிக்கப்பட்ட போதே பலவீனமாக இருந்ததால் உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சில்வர் மான்ஸ்ட்ராவின் உடல் இன்று உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.
மயக்க மருந்து செலுத்தாமல் பிடிக்கப்பட்ட மான்ஸ்ட்ரா
சில்வர் க்ளவுட், கோக்கால் பகுதிகளில் சுற்றித்திருந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்றுக்கு வாலை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அந்த யானையை கண்காணிப்பதும் உணவில் மருந்துகளை வைத்து தருவதுமாக இருந்தனர். ஆனாலும் கூட யானை முழுமையாக குணம் அடையவில்லை. அதற்குள் அந்த காயம் புரையோடு புழு வைக்க ஆரம்பித்துவிட்டது. யானையும் மிகவும் மெலிந்து சோர்வுடன் காணப்பட்டது. ஆபத்தான நிலையை உணர்ந்த பொதுமக்கள் இந்த சில்வர் மான்ஸ்ட்ரா யானைக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கட்ந்த மாதம் புத்தூர் வயல் பகுதியில் தென்பட்ட யானையை வனத்துறையினர் ஈப்படங்காடு காபி தோட்டத்தில் இருப்பதை உறுதி செய்து விஜய் மற்றும் சுமங்கலா கும்கி யானைகள் உதவியுடன் சுற்றி வளைத்து, மயக்க ஊசி செலுத்தாமலே பிடித்தனர். பிறகு கோடநாடு வன எல்லைக்கு உட்பட்ட அபயரண்யம் யானைகள் காப்பகத்தில் இந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil