scorecardresearch

தனியாருக்கு வாடகை விடப்பட்ட ஊட்டி ரயில்; மலைக்க வைக்கும் மலை ரயில் கட்டணம்

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த ஒரு தனியார் நிறுவனம், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது.

தனியாருக்கு வாடகை விடப்பட்ட ஊட்டி ரயில்; மலைக்க வைக்கும் மலை ரயில் கட்டணம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக கிட்டத்தட்ட 8 மாதங்களாக ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஊட்டி மலை ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே மலை ரயில் கட்டணம் பயணிகளை மலைக்க வைக்கும்படி நிர்ணயிக்கப்பட்டுளது.

ஒரு தனியார் நிறுவனம் ரயிலை வாடகைக்கு எடுத்து, நீலகிரி மலை ரயில் (என்.எம்.ஆர்) பாதையில், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே வார இறுதியில் இயக்குகிறது. மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது. இதற்கு முன்பு இந்த மலை ரயிலில் வழக்கமாக முதல் வகுப்பு டிக்கெட் ரூ.600 மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.295 என வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஒரு நபருக்கு ரூ.3,000 என்று கட்டணம் நிர்ணயித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை மலைக்க வைத்துள்ளது.

ஊட்டி மலை ரயிலின் இந்த அதிக கட்டணம் சமூக ஊடகங்களில் ரயில்வே ஆர்வலர்கள் மற்றும் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய வழியை தனியார்மயமாக்குவதற்கு முன்னோடியாக இந்த நடவடிக்கையை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், சேலம் ரயில்வே பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்கள் ஒரு தனியார் சேவையை மட்டுமே இயக்கியுள்ளதாகவும், அந்த வழியை தனியார்மயமாக்கவில்லை என்றும் தேரிவித்துள்ளது. “என்.எம்.ஆர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் தேதி ரயில்வே நிர்வாகத்தின் ஊடக வெளியீடு மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில் வாடகை சிறப்பு ரயில்கள் குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது ஒரு தனியார் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற ரயில்கள் முன்பே இயக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இதே போன்ற சேவைகள் இயக்கப்படலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் மண்டல ரயில்வே பயணிகளின் ஆலோசனைக் குழு முறையாக தினசரி ரயில் சேவைகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்க அனுமதி அளிப்பதன் பின்னணியில் உள்ள காரண என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலை ரயில் கட்டணமாக ரூ.3,000ஐ சுற்றுலாப்பயணிள் தாமாக முன்வந்து அளித்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. ஒரு கோரிக்கை இருந்தால், ரயில்வே முன்பதிவு செய்யப்பட்ட என்.எம்.ஆர் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அது சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பயனளிக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த தனியார் நிறுவனம் ஒரு நாளுக்கான முழு கட்டணமான ரூ.4.9 லட்சத்தையும் செலுத்துகிறது. கூடுதலாக, இந்நிறுவனம் இதை TN-43 என பெயரிட்டுள்ளது. மேலும் ரயில் கோச்பகுதிகளுக்கு வண்ணம் தீட்டியுள்ளது. லோகோ பைலட் மற்றும் காவலர்கள் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். ஆனால், உதவி ஊழியர்கள் நிறுவனத்தால் இடுபடுத்தப்படுவார்கள்.

ஒரு நிறுவனம் தனது பெயரை விளம்பரப்படுத்தவும் கோச்களின் வண்ணத்தை மாற்றவும் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்று ரயில்வே பயணிகள் நல சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். “நிறுவனம் தனது பிராண்டை மேம்படுத்துவதற்கும், ரோலிங் பங்குகளில் மாற்றங்களைச் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.” என்று கூறுகின்றனர்.

சென்னை டிவிஷன் ரயில் பயனர்களின் ஆலோசனைக் குழுவினரும் இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல், ரயில்வே என்.எம்.ஆர் சேவைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே இயக்குவதாகக் கூறினார். “சென்னை-திருப்பதி போன்ற மிகவும் போக்குவரத்து அதிகம் உள்ள பிரிவுகளில் இதேபோன்ற சோதனைகள் செய்வதை அவர்கள் உடனடியாக இல்லை என்றாலும் தாமதமாகவேனும் பரிசீலிக்ககூடும்” கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கோயம்புத்தூர் எம்.பி., பி.ஆர்.நடராஜன் தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். நடராஜன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வேயின் முடிவுக்கு எதிராக நாம் ஏற்கனவே நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அதிகாரிகள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது ரயிலை இயக்குபவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும், பொதுமக்களுக்கு பயனில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வி.சிவதாஸ் ஊடகங்களிடம் கூறுகையில், “ரயில்வே இதை வருவாய் ஈட்டும் நடமுறையாக பார்க்காமல், பொதுமக்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும். ரயில்வே அனைத்து ரயில்களையும் வாடகை ரயில்களாக மாற்றக்கூடாது.” ரயில்வேயின் இந்த நடவடிக்கையை நீலகிரி வாசிகளும் பாராட்டவில்லை. ஒரு பாரம்பரிய ரயில் அனைத்து மக்களும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே நீலகிரி மக்களின் கருத்தாக உள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nilgiris train chartered between mettupalayam udhagamandalam ticket fare rs3000 per seat

Best of Express