தமிழ்நாடு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தென்காசி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் இன்று (ஜூலை 7) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தென்காசியில் உள்ள 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழம்பாவூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
இன்று எங்கெல்லாம் மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கன மழை பெய்யும். வரும், 10 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல், இலங்கை கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் ஆகிய இடங்களில் மணிக்கு, 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
அரபிக் கடலில் லட்சத்தீவு, கேரள - கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“