கேரளாவில் இருந்து திரும்பிய 40 தமிழர்கள்...நிபா வைரஸ் பரிசோதனை!

கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி திரும்பிய தமிழர்களுக்கு அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் தாக்கம் பற்றிய தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வரக் கேரள அரசு மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மெலேசியாவில் இருந்து தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ குழுவை அழைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் வேலை பார்த்து வந்த 40 ஊழியர்கள் சமீபத்தில் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பினர். 40 பேரில் ஒருவரான பெரியசாமி, நேற்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பெரியசாமியை நிபா வைரஸ் தாக்கியுள்ளதாக கூறி வந்தனர்.

வேகமாகப் பரவி வரும் இந்தச் செய்தியை குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருச்சிக்கு கேரளாவில் இருந்து வந்த 40 பேருக்குத் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது, அதில் யாருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று கூறினார். மேலும் பெரியசாமிக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும், திருச்சியை நிபா வைரஸ் தாக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

×Close
×Close