கேரள மாநிலத்தில் சில தினங்களுக்கு முன், இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.
கேரளாவின் அண்டைப்பகுதியான கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கே.வனிதா கூறியதாவது,
நிபா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் சுவாசக்கோளறு மற்றும் நரம்பியல் பிரச்னைகளுக்கு எளிதாகவும், விரைவாகவும், அதேசமயம் தனிக்கவனம் எடுத்து நோயாளிகளை கண்காணிக்கும் வசதி, மருத்துவமனையில் தயாராக உள்ளது.
33 படுக்கைகள், அதிநவீன நோய்த்தடுப்பு முறைகள், ஐசியூ வசதி, நோயை முன்னரே அடையாளம் காணும் வசதி, நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்கும் நுட்பம் உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் வனிதா கூறினார்.
கேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக- கேரள எல்லையை கடக்கும் பஸ்கள், செக்போஸ்ட்களில் நிறுத்தப்பட்டு அதிலுள்ள பயணிகளுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டபிறகே, அவர்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நிபா வைரஸ் அறிகுறி காணப்பட்டவர்கள், மற்றவர்களிடமிருந்து தனித்துவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, தமிழக மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 18 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தாக்குதலை குணப்படுத்த இதுவரை மருந்து / சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது துயரமான விசயந்தான்....