நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி : சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உத்தரவிட்டது. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்!

நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உத்தரவிட்டது. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்!

நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை! கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்குவதற்காக ஆசை வார்த்தை கூறி இவர் நடத்திய உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என்றும் ஒரு இடத்தில் நிர்மலா தேவி குறிப்பிட்டார்.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தன் பங்குக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் விசாரணைக் களத்தில் குதித்தன.

சிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் நேற்று விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீஸார் நடத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் சுமார் 3 மணி நேரம் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நடந்தது. குறிப்பாக அங்கு துணைவேந்தர் செல்லத்துரையின் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினார்கள். அவற்றை ஆய்வு செய்து விசாரிக்க இருக்கிறார்கள்.

சிபிசிஐடி போலீஸார் தங்களில் அடுத்தகட்ட நடவடிக்கையாக நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தார்கள். இன்று காவல் நீட்டிப்புக்காக நிர்மலா தேவி சாத்தூர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அங்கு நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

நிர்மலா தேவியை 7 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு 5 நாட்கள் நிர்மலா தேவியை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. இதன்படி 5 நாட்கள் தங்கள் பொறுப்பில் நிர்மலா தேவியை எடுத்துக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையிலான டீம் விசாரிக்க இருக்கிறது.

நிர்மலா தேவி ஆடியோ பதிவில் கூறியிருந்த விவரங்கள் குறித்து இந்த விசாரணையில் கேள்விகள் கேட்கப்படும். ஏற்கனவே இதேபோல நிர்மலா தேவி பாலியல் வலையில் மாணவிகளை சிக்க வைத்திருக்கிறாரா? இதில் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகள் யார், யார்? என்பவை தொடர்பாகவும் விசாரிக்க இருக்கிறார்கள். இதில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close