அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நிர்மலாதேவியின் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கின. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வந்தது.
நிர்மலா தேவிக்கு ஜாமீன்
இந்நிலையில், நிர்மலாதேவிக்கு இன்று ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நிர்மலாதேவியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நிர்மலா தேவியின் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இதில், இரண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான மற்றவர்களுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளைத் தான், ஐகோர்ட் மதுரை கிளை இன்று நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது" என்றார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இதற்கு மேலும் நிர்மலா தேவி சாட்சிகளை கலைக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படையிலும், பத்திரிக்கையிடமோ, தனி நபர்களுக்கோ இந்த வழக்கு குறித்து என பேட்டியும் தரக் கூடாது என்று நிபந்தனையுடனும் நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.