பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி!

நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஜாமின் கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் விடுமுறை கால முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நிர்மலா தேவியின் வழக்கறிஞர் மதுரை ராமசந்திரன் மூலம் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே, இதே நீதிமன்றத்தில் கடந்த வாரம், பேராசிரியர் முருகன், கருப்பசாமி தாக்கல் செய்த ஜாமின் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை 18 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மற்றொரு வழக்கு ஒன்றில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உத்தரவிட்டுது. மேலும் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close