நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சந்தானம் குழு விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர் தரப்பில் (ஆளுநர்) உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உண்மை வெளியாக வேண்டுமென்றால் அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர் (ஆளுநர்) தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனடிப்படையில் சாட்சி விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், மாணவிகளின் பெயர்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டுமென வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உள் விசாரணையை எப்படி நிறுத்த முடியும்? குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், மாணவிகளின் பெயர்களை வெளியிட பத்திரிகை, ஊடகங்களுக்கு எதிராக மனுதாரர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பற்றியும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் பதிவு மற்றும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.