பேராசிரியர் நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சிபி சி ஐ டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழியில் நடத்த முயற்சிப்பதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியயை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு பதிலாக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினராலேயே மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஆளுனர் நியமித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் கமிஷன் அறிக்கையை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.