கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் அழைத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கில் நிர்மலாவை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
நிர்மலா தேவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி சிறப்பு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் பெண் சூப்பிரண்டு. இதுவரை விசாரித்ததில், நிர்மலா குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் குறித்து எந்த வித தகவல்களையும் அவர் கூற மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இன்று 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடங்கினர். விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கில் கூடுதலாக துணை பேராசிரியர் சிக்கியுள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வரும் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்த துணை பேராசிரியர் முருகன், திடீரென தலைமறைவானார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, முருகன் வசிக்கும் பகுதி, மற்றும் அவருக்கு அதிகமாகச் செல்லும் இடங்களில் எல்லாம் திடீர் ஆய்வை சிபிசிஐடி நடத்தியது. இந்த தேடுதலின் போது, தலைமறைவாகி இருந்த முருகன் போலீசாரிடம் கையும் களவுமாகச் சிக்கினார்.
துணை பேராசிரியர் முருகனிடம் விசாரணையைத் துவங்கியுள்ளனர். இதில், நிர்மலாவிற்கும், முருகனுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது, எவ்வாறு உதவி செய்தார், இது போல் எத்தனை மாணவிகளை இந்தச் சூழ்ச்சியில் சிக்க வைத்துள்ளனர் என்ற கோணங்களில் விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த விவகாரத்தில், மற்றொரு குற்றவாளியாக ஆராய்ச்சி மாணவர் ஒருவரை போலீஸ் தேடி வருகிறது.
நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான உணவு, உடை வழங்கவும் அனுமதி வழங்கியுள்ளனர்.