நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுனரால் நியமிக்கப்பட்ட சந்தானம் ஆணையத்தில் ஏப்ரல் 21,25,26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதத் துறை உதவிப் பேராசிரியை! அந்தக் கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் வலை விரிக்கும் வகையில் இவர் பேசிய ஆடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காகவே மாணவிகளுக்கு அவர் வலை விரிப்பதாக அந்த உரையாடல் மூலமாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீதும் சந்தேகம் கிளம்பியதால், அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தையும் ஆளுனர் நியமனம் செய்திருக்கிறார். ஆர்.சந்தானம் இன்று விசாரணைப் பணியில் இறங்கினார். மதுரை வந்து இறங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விசாரணைக்கு தேவைப்பட்டால், பேராசிரியைகளை பயன்படுத்திக் கொள்வேன்’ என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை முதல் கட்டமாக அவர் சந்தித்து பேசினார்.
ஆர்.சந்தானம் விசாரணை ஆணையம் சார்பில் இன்று (ஏப்ரல் 19) ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஏப்ரல் 21, ஏப்ரல் 25, ஏப்ரல் 26 ஆகிய 3 நாட்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டிருக்கிறது.