சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கும் வகையில் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். கல்லூரி பேராசிரியர் ஒருவர், தனது கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பது, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவிகளை தனது பின்புலத்தை வைத்து மிரட்டுவது என சுமார் 30 நிமிடங்கள் உரையாடும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்மலா தேவி வாக்மூலம்:
அந்த ஆடியோவில் பேசியவர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி. போனில் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய விதம், மற்றும் அவரின் மிரட்டல் தோனி அவருக்கு பின்னால் முக்கிய புள்ளி யாரோ இருப்பதை நமக்கு உணர்த்தியது.
இந்நிலையில், கல்லூரியில் இருந்து நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாதர் சங்கத்தினர், அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். அதன் பின்பு, அருப்புக்கோட்டை காவல் துறையினர் நிர்மலா தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னதாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நிர்மலா தேவி இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும், மற்ற பேராசிரியர்களின் பெயரையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்,சிபிசிஐடினர் நிர்மலாதேவியிடம் நடத்தி வரும் விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருப்பதாக பிரபல நாளிதழான தினத்தந்தி இன்று செய்தி வெளியிட்டது. இதில் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என்ற பெயரில் ஒரு பக்க அளவில் சிறப்பு கட்டுரையை வெளியாகியுள்ளது.
அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் சுருக்கமாக உங்கள் பார்வைக்கு...
"இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.
அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.
அப்போது முருகன் என்னிடம், "என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று மீண்டும் கேட்டார். "நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.
மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.
முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்." என்று நிர்மலா தேவி கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக நிர்மலா தேவி அளித்த அதிர்ச்சி வாக்மூலங்கள் நாளை (31.10.18) வெளியாகும் என்று தினத்தந்தி நாளிதழ் ட்விஸ்டுடன் இன்றை கட்டுரையை முடித்துள்ளது. இந்நிலையில் நிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்? என்ற தகவல் நாளை வெளியாகும் என வாசகர்கள், பொதுமக்கள் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.