Nirmala Sitaraman and Kanimozhi debate on GST hike: ஜி.எஸ்.டி மீது பழிப்போட்டு, தமிழக அரசு அதிக வரி விதிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் அளித்தார்.
இதையும் படியுங்கள்: கலைப்புலி தாணு உட்பட 4 சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டினார். மேலும், தக்காளி மற்றும் வெங்காயம் விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அதைவைத்து மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்றும் கனிமொழி கூறினார்.
இதற்கு தமிழில் பதில் அளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் ரூ.5ம், டீசல் விலையில் ரூ.4ம் குறைப்போம் என்று சொன்னார்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசு எரிபொருள் மீதான விலையைக் குறைத்தப்போதும், தமிழகத்தில் உள்ள தி.மு.க அரசு ஏன் விலையைக் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக நிதியமைச்சர் விலைக்குறைப்புக்கு தேதி சொல்லவில்லை என்று சொல்கிறார், என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழக எம்.பி.,க்கள் குறுக்கிட்டனர். அதற்கு நீங்கள் பேசுவதை நான் கேட்கிறேன். அதுபோல் நான் பேசுவதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
பின்னர், தமிழகத்தில் ரூ. 100 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தயிர், 5% ஜி.எஸ்.டி-க்கு பிறகு ரூ.105க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி மீது பழிப்போட்டு, தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு அதிக வரி விதிக்கிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil