மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை வரும்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வது ஒரு சாதரண நிகழ்வு. ஆனால் கோவிலை ஒட்டிய பரபரப்பான தெற்கு மாடத் தெருவில் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்யும் 56 வயதான எம் பத்மாவுக்கு, நிர்மலா சனிக்கிழமை இரவு அவர் கடைக்கு வாடிக்கையாளராக வந்த மிகப் பெரிய விஐபி.
இரவு 7.30 மணியளவில் அவர் என் கடைக்கு வந்தார். அவருடன் மேலும் ஒருவர் இருந்தார். அப்போது இன்னும் பலர் அங்கு துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தி இருந்தனர். தினமும் இரவு 11 மணிக்கு வீட்டை அடைந்த பிறகு டிவி செய்திகளைப் பார்ப்பேன். அதனால், நான் அவர் முகத்தை அடையாளம் கண்டுகொண்டேன் என்று பத்மா நிர்மலா சீதாராமனைப் பற்றி பேசினார்.
தெருவில் ஒரு விஐபி இருப்பதைக் கண்டவுடன், முன் பகுதியில் இருந்து சில பொருட்களை அகற்றத் தொடங்கினேன். விஐபிக்கள் இங்கு வரும்போது, போலீசார் எங்களை கடையை மூடிவிட்டு கிளம்பச் சொல்வார்கள். அதனால் நான் எனது பொருட்களை விரைவாக எடுத்து வைக்க தொடங்கினேன், ஆனால் அதற்குள் அமைச்சர் எனது கடைக்கு வந்து, பொருட்களை வாங்க விரும்புவதாகச் சொன்னார்” என்று பத்மா கூறினார்.
கோயம்புத்தூர் தெற்கு பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனுடன் வந்த நிர்மலா சீதாராமன் 2 கிலோ பிடி கருணை கேட்டு வாங்கினார். பிறகு கீரை வாங்க வேறொரு கடைக்கு சென்றார் என்றார் இளங்கலை பொறியியல் முடித்து, இப்போது அம்மாவுக்கு உதவியாக இருக்கும் பத்மாவின் மகள் சுகன்யா முருகேசன்.

அமைச்சருக்கு தள்ளுபடி கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு, சுகன்யா இல்லை என்றார். அவர் 200 ரூபாய் கொடுத்துதான் 2 கிலோ பிடி கருணை வாங்கினார். மற்றவர்களுக்கு விற்பனை செய்வது போலத்தான் நாங்கள் அவருக்கும் விற்றோம், என்று கூறும் சுகன்யா சீதாராமனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.
யாரோ அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார், ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர், எங்களிடம் விலைவாசி உயர்வு குறித்தும், நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் விசாரிக்கும்படி கூறினார்.
அவர் அங்கிருந்து சென்ற பிறகு, கடையிலிருந்த மற்றொரு வாடிக்கையாரும் அதே கேள்வியை அமைச்சரிடம் கேட்கலாம் என்று நினைத்தார், ஆனால் எங்கள் கடைக்கு ஏதாவது சிக்கல் ஏற்படும் என்று பயந்து வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். நான் அவளிடம் கேட்காததற்கு நன்றி சொன்னேன்… எனக்கு ஒரு பெரிய கடை இருந்தால், எங்கள் பிரச்சனைகளை அமைச்சரிடம் கூறியிருப்பேன். ஆனால் நாங்கள் சாலையோர வியாபாரிகளாக இருக்கும்போது எப்படி அவரிடம் அதையெல்லாம் கேட்க முடியும்? என்றார் சுகன்யா.
எந்த அரசியல் கட்சியுடனும் தனக்கு தொடர்பில்லை என்று பத்மா கூறினார். “என்ன அரசியல்? நாம் கடினமாக உழைப்பதால்தான் வாழ முடிகிறது. நான் பள்ளிக்குச் சென்றதில்லை. இதேபோல கடையை நடத்தி வந்த என் அம்மாவோடு நான் இங்கேயே வளர்ந்தேன். அது சாலைக்கு எதிரே இருந்தது, என்றார்.
மேலும் பத்மா கூறுகையில், விலைவாசி உயர்வு மட்டுமே தான் தொடர்ந்து காணும் ஒரே மாற்றம். ’அமைச்சர் நேற்று ஒரு கிலோ பிடி கருணைக்கு 100 ரூபாய் கொடுத்தார், இது கடந்த ஆண்டு ஒரு கிலோ 60-80 ரூபாய் ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கேரட் ரூ.60 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.160 ஆக உள்ளது. அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன, என்று அவர் கூறினார்.
தனது சாலையோர காய்கறி வியாபாரம் தான் தனது குழந்தைகளின் படிப்புக்கும், வீட்டின் அனைத்து செலவுகளுக்கும் உதவியது என்றார். எனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளேன். அடுத்து சுகன்யா தான் இருக்கிறாள் என்று முடித்தார் பத்மா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“